மருத்துவ கல்லூரி மாணவிகள் பாலியல் புகார்:அரசு டாக்டர் பணியிடை நீக்கம்


மருத்துவ கல்லூரி மாணவிகள் பாலியல் புகார்:அரசு டாக்டர் பணியிடை நீக்கம்
x

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுரை


மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரி

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மயக்கவியல் துறை மூத்த உதவி பேராசிரியராக இருந்தவர் சையது ஜாகிர் உசேன். இவர் மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் டீன் ரத்தினவேலுவிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்த விசாகா கமிட்டிக்கு டீன் உத்தரவிட்டார். விசாகா கமிட்டி விசாரணை நடத்தி, அது குறித்த அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைத்தது. அதன்பேரில் சையது ஜாகிர் உசேனை பணியிடை நீக்கம் செய்து மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து, டீன் ரத்தினவேலு கூறுகையில், டாக்டர் சையது ஜாகிர் உசேன் மீது 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். எனவே புகார்கள் விசாகா குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாகா குழு, மருத்துவர் சையது ஜாகிர் உசேன் மற்றும் புகார் அளித்த மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர், சையது ஜாகிர் உசேனை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்றார்.

பழிவாங்கும் நடவடிக்கை

இதற்கிடையே, டாக்டர் சையது ஜாகிர் உசேன் நிருபர்களிடம் கூறுகையில், அரசாணை 354 அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட அரசு டாக்டர்களுக்கான பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறேன். மேலும் தமிழக மருத்துவத்துறையில் அரசு டாக்டர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவற்றில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக சங்கத்தின் சார்பில் தொடர்ந்து போராடி வருகிறேன். இதில் சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர்கள், மருத்துவக்கல்வி இயக்குனர்களுக்கு எதிராகவும் கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன்.

இந்தநிலையில் பாலியல் தொல்லை அளித்ததாக என்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துறைரீதியான விசாரணை நடத்தப்படாமல் நேரடியாக விசாகா குழுவுக்கு அனுப்பப்பட்டது. விசாரணையில் நேரடியாக ஆஜராகி எனது தரப்பில் நியாயங்கள் மற்றும் சந்தேகங்களை எடுத்துரைத்தேன். எனது கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படாமல் பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் என்னை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஆஸ்பத்திரியில் முறைகேடுகளுக்கு எதிராக போராடுபவர்கள் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை ஆயுதமாக பயன்படுத்தி பழிவாங்கப்படுகின்றனர். என் மீதான நடவடிக்கைக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்த உள்ளேன் என்றார்.


Next Story