திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை


திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை
x

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 6 பேருக்கும், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

திருச்சி

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 6 பேருக்கும், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

உண்மை கண்டறியும் பரிசோதனை

தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி மர்ம நபர்களால் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேக நபர்களான சத்யராஜ், திலீப் என்ற லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து, தென்கோவன் என்ற சண்முகம், மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த முடிவு செய்தனர்.

இதில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். தென்கோவன் என்கிற சண்முகம் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்தார். உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேரும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையுடன் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜராக நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.

மருத்துவ பரிசோதனை

அதன்படி சாமி ரவி, திலீப் என்கிற லட்சுமி நாராயணன், சிவா, ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் ஆகிய 6 பேரும் நேற்று காலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களுக்கு இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் உள்பட 5 டாக்டர்கள் கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 6 பேருக்கும் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே, இதய பரிசோதனை மற்றும் மனதளவில் சீராக உள்ளனரா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இதில் ஒருவருக்கு சுமார்½ மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை பரிசோதனை நடைபெற்றது.

5 பேருக்கு இன்று...

மீதமுள்ள நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய 5 பேருக்கும் இன்று (சனிக்கிழமை) மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூரை சேர்ந்த செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவர்கள் கொடுக்கும் இந்த மருத்துவ பரிசோதனை முடிவு அறிக்கையை வருகிற 21-ந்தேதி திருச்சி குற்றவியல் நீதி மன்றம் எண் 6-ல் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து இந்த மருத்துவ பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் உண்மை கண்டறியும் பரிசோதனை யார் யாருக்கு நடத்தப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.


Next Story