1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை


1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் முதன்முதலாக விழுப்புரத்தில் 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை கலெக்டர் மோகன் வழங்கினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மாநிலத்திலேயே முதன் முறையாக 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்கான அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களின் நலனை காக்கும்பொருட்டு மாவட்டங்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி அவர்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

1,430 ஓய்வூதியர்களுக்கு...

விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் 6,357 ஓய்வூதியர்கள், செஞ்சியில் 2,453, திண்டிவனத்தில் 3,579, வானூரில் 998, விழுப்புரம் சார்நிலை கருவூலத்தில் 107 ஓய்வூதியர்கள் என மொத்தம் 13,494 ஓய்வூதியர்கள் தங்களுக்குரிய பலன்களை பெற்று வருகின்றனர். இவர்களில் 1,430 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டை தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 2022 ஜூலை 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓய்வூதியம் பெறுபவர்களும் (வாழ்க்கைத்துணை உள்பட), குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களும் கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு (2022-26) ரூ.5 லட்சம் மருத்துவக்காப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஓய்வூதியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து ரூ.497 சந்தா தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் சில நோய்களையும் சில சிறப்பினமாக கருதி, அதற்கும் ரூ.10 லட்சம் வரை சிகிச்சை பெற உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. உயிர்காக்கும் அவசரத்தன்மை கொண்ட அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள், கிராம உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இத்திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஓய்வூதியர் நலன் ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஓய்வூதியர் நலன் கணக்கு அலுவலர் ராஜசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சாந்தி, மாவட்ட கருவூல அலுவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story