19 குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை, சான்றிதழ்
கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த 19 குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை, சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
வேலூர்
கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று புதுடெல்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் கானொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
அதையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள். ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தில் இலவச கல்வி, 23 வயது வரை ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு, பள்ளிக்குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் உதவித்தொகை, 18 வயது நிரம்பியவுடன் மாதாந்திர நிதியுதவி, 23 வயது பூர்த்தியானவுடன் பி.எம்.கேர்ஸ் ரூ.10 லட்சம் வழங்குவது உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பெற்றோரை இழந்த 19 குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை, பி.எம்.கேர்ஸ். சான்றிதழ், தபால் நிலைய சேமிப்பு கணக்கு புத்தகம், பிரதமர் நரேந்திரமோடி எழுதிய கடிதம் ஆகியவற்றை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.