62 சிறுவர்களுக்கு ரூ.3 கோடியில் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை


62 சிறுவர்களுக்கு ரூ.3 கோடியில் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.3 கோடியில் 62 சிறுவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

மயிலாடுதுறை


ரூ.3 கோடியில் 62 சிறுவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 33 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகைகோரி 39 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கி கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 34 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 43 மனுக்களும் உள்பட மொத்தம் 255 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலா ரூ.6,690 மதிப்பில் 2 தையல் எந்திரங்கள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறிவகம் சிறுவர்கள் இல்லத்தில் உள்ள 62 சிறுவர்- சிறுமிகளுக்கு ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள், கூட்டுறவுத்துறையின் சார்பில் மயிலாடுதுறை தாலுகா, மல்லியக்கொல்லை அபிராமி மகளிர் சுய உதவிக்குழுவுக்கு, சுய உதவிக்குழுக்கடன் திட்டத்தில் ரூ.15 லட்சத்திற்கான காசோலை, மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தை சேர்ந்த ராதா என்பவருக்கு மத்திய காலக் கடன் திட்டத்தின் கீழ் சிறு பால் பண்ணை அமைக்க ரூ.3.30 லட்சத்துக்கான காசோலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்

அதைத்தொடர்ந்து வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், வேளாண் இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தயாள வினாயக அமல்ராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, உதவி கலெக்டர்கள், யுரேகா, அர்ச்சனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story