மக்களை தேடி மருத்துவ பணியாளர்களை முழுநேர ஊழியராக்க வேண்டும்


மக்களை தேடி மருத்துவ பணியாளர்களை முழுநேர ஊழியராக்க வேண்டும்
x

பணி நேரத்தை நிர்ணயம் செய்து, முழு நேர ஊழியராக்க வேண்டும் என மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் மனு அளித்தனர்.

நாமக்கல்

கலெக்டரிடம் மனு

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், தன்னார்வலர்கள் என்ற முறையில் தமிழகம் முழுவதும், 11 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டு, இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். இதில் பணியாற்றும் தன்னார்வ ஊழியர்களுக்கு, 2 மணி நேர பணிக்கு, ரூ.4,500 ஊக்கத்தொகை என்று கூறினாலும், எங்கள் பணி வீடு, வீடாக சென்று மருந்து வழங்குவது, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கண்டறிதல், தொற்று நோய்கள் கண்டறிதல் போன்றவையாகும்.

தீபாவளி பண்டிகை

இவற்றை ஆன்லைன் பதிவு செய்தல், முகாம்களில் முழுநேரமாக பணியாற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம். எங்களை ஊழியர்களாக அங்கீகரித்து, எங்கள் கோரிக்கையை அமலாக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குறிப்பாக எங்களுக்கு காலத்துக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நேரத்தை நிர்ணயம் செய்து, முழு நேர ஊழியராக்க வேண்டும். தீபாவளி பண்டிகை கால செலவுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.

ஊழியர்களின் ஊதியத்தை, வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்புபடி வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களை விடுப்பாக கருத வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.


Next Story