மருத்துவ மாணவர் மதன்குமார் உயிரிழப்பு; அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - டிடிவி தினகரன்
மருத்துவ மாணவர் மதன்குமார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் மதன்குமாரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மதன்குமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதியின் மேற்கூரையில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மாணவர் மதன்குமார் உயிரிழந்திருக்கலாம் என ஜார்கண்ட் மாநில காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது
இருப்பினும் மருத்துவ மாணவர் மதன்குமார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மதன்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.