லாரியில் கொண்டு வந்து வீசப்பட்ட மருத்துவக் கழிவுகள்
லாரியில் கொண்டு வந்து வீசப்பட்ட மருத்துவக் கழிவுகள்
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே லாரிகளில் மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து சாலையோரம் வீசிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்காணிப்புக் கேமரா
மடத்துக்குளத்தையடுத்த செங்கழனிப்புதூர் பகுதியில் அதிகாலையில் விவசாயப் பணிகளுக்காக சென்றவர்கள் சாலை ஓரத்தில் ஆங்காங்கே மூட்டைகள் கிடப்பதை பார்த்தனர்.மேலும் மூட்டைகளிலிருந்து மருந்து வாசத்துடன் கலந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்து அந்த மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது அதில் மருத்துவக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு அருகிலுள்ள வீட்டின் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு லாரியில் மூட்டைகளைக் கொண்டு வந்து சாலையோரம் வீசி விட்டு சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நடவடிக்கை
சுமார் 20-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டிருப்பது அச்சத்தை அதிகரிப்பதாக உள்ளது.கேரளா மாநில எல்லையை ஒட்டிய பல பகுதிகளில் கேரளக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகளா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு பல விதிகள் உள்ள நிலையில் நோய்த் தொற்று பரவும் வகையில் கழிவுகளை கொட்டிச் சென்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.பல சாலைகள் கோழிக்கழிவுகள், கட்டிடக் கழிவுகள் போன்றவற்றைக் கொட்டும் இடமாக மாறிவிட்ட நிலையில் விவசாயம் சார்ந்த இந்த பகுதியிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது வேதனையளிப்பதாக உள்ளது.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
செங்கழனிப்புதூர் பகுதியில் மூட்டையில் வைத்து வீசப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளைப் படத்தில் காணலாம்.