ரூ.23½ லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் மீனாட்சி அம்மன் கோவில் யானை உற்சாக குளியல்


ரூ.23½ லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் மீனாட்சி அம்மன் கோவில் யானை உற்சாக குளியல்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ரூ.23½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் யானை உற்சாகமாக குளியல் போட்டது.

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ரூ.23½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் யானை உற்சாகமாக குளியல் போட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கு கோவில்யானை பார்வதி ஆசி வழங்குகிறது. இந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி, சில ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை நோயால் பாதிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள கால்நடை மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், தாய்லாந்து நாட்டிலிருந்து யானைக்கான சிறப்பு மருத்துவக்குழுவினர் வந்து சிகிச்சை அளித்து சென்றனர். அதன்பின்னர் பார்வை இழப்பு சரியானது.

ரூ.23½ லட்சம்

இதுபோல், பார்வை இழப்பு மேலும் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக புத்துணர்வு அளிக்க கோவிலுக்குள் நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி கோவில் வளாகத்தில் யானை நீந்தி குளிக்கும் வகையில் நீச்சல் குளம் கட்டுவதற்கு ரூ.23½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி கட்டி முடிக்கப்பட்ட நீச்சல் குளத்தை நேற்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இதில், மாநகராட்சி மேயர் இந்திராணி, இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, கோவில் துணை ஆணையர் அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மகிழ்ச்சி

இதனை தொடர்ந்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 4 ஆண்டுக்கு முன்பு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி, இந்தியாவில் தலைசிறந்த மருத்துவ குழுவினராலும், தாய்லாந்திலிருந்து யானை கண் மருத்துவ குழுவினரை வரவழைத்தும் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் கண்ணில் உள்ள லென்சில் ஏற்பட்ட நோய்த்தொற்றை சரி செய்யும் வகையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எந்நேரமும் பணியிலிருப்பதால் இருக்கும் மன அழுத்தத்தில் இருந்து போக்கும் வகையில் யானைக்கு புத்துணர்வு அளிக்க பெரிய தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் யானை விளையாடி குளிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.


Next Story