வணிகர்களை சந்தித்து ஆதரவு
டெல்டா மாவட்டங்களில் 11-ந் தேதி கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர்களை சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர அளவு நீரை கர்நாடக அரசு முறையாக திறந்து விடாததை கண்டித்தும், உடனடியாக தண்ணீர் திறந்து விட மத்திய அரசை வலியுறுத்தியும் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் கடையடைப்பு போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடக்கிறது.இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்றுமாலை நடந்தது. இதற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கடையடைப்பு போராட்டம் தொடர்பாக வணிகர்களை சந்தித்து ஆதரவு கேட்பது எனவும், கடையடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.