உரிய தகவல் தெரிவிக்காமல் நடத்தப்பட்ட குறைதீர் கூட்டம்


உரிய தகவல் தெரிவிக்காமல் நடத்தப்பட்ட குறைதீர் கூட்டம்
x
திருப்பூர்


உடுமலையில் விவசாயிகளுக்கு முறையான தகவல் எதுவும் தெரிவிக்காமல் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

விவசாயிகள் வேதனை

கோட்ட அளவிலான விவசாயிகளின் குறைகளைக்கேட்டு தீர்வு காணும் வகையில் மாதம்தோறும் ஆர்.டி.ஓ. தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்படுவதில்லை என்று குறை தீர் கூட்டம் குறித்த தங்கள் குறைகளைக் கூறி விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிய ஆர்.டி.ஓ.வாக ஜஸ்வந்த்கண்ணன் பொறுப்பேற்றதும் மாற்றங்கள் வரும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டம் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமே தகவல் பரிமாறப்பட்டுள்ளது. பத்திரிகைகளுக்கோ, விவசாயிகளுக்கோ தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மின் இணைப்பு

இதனால் நேற்று உடுமலை அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒருசில விவசாயிகள் மட்டுமே வந்திருந்தனர். இதனையடுத்து அதிகாரிகள் போன் மூலம் மேலும் சில விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.இதனால் விவசாயிகள் அதிருப்தியுடன் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளுடன் கூட்டம் தாமதமாகத் தொடங்கியது.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

பாலதண்டபாணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்:-

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகள் பலருக்கும் இணைப்பு வழங்கப்படவில்லை. ஒரு சில விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மின் இணைப்பு பெற தயாராக இருக்குமாறு மின் வாரியத்தால் அறிவிப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக தற்போது மின் இணைப்பு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன் என்று கடிதம் எழுதித் தரச் சொல்லி விவசாயிகளை வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் அந்த விவசாயிகளின் முன்னுரிமை பாதிக்கப்பட்டு மின் இணைப்பு கிடைக்க தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மர்ம விலங்கு

பெரிய கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக மர்ம விலங்கால் கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளது.ஆனால் அந்த விலங்கைக் கண்டறியவோ, கால்நடைகளைப் பாதுகாக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.மேலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பலரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கிராமங்கள் தோறும் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போட வேண்டும்.

மதுசூதனன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்:- அரசு ஆணை அடிப்படையில் விவசாயிகளால் அமைக்கப்பட்டுள்ள பாசனக் குழாய்கள் மற்றும் மின்சாரத்தைத் துண்டிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகளை அழைத்து கருத்து கேட்டு அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது. ரஷ்யா- உக்ரைன் போரால் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் தேங்காய் விலை உயராதது மர்மமாக உள்ளது. ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து திட்டமிட்டு விலை உயராமல் பார்த்துக்கொள்கின்றனர். மேலும் மட்டை மில்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியால் தேங்காய் மட்டையும் விலை குறைந்துள்ளது.

சரவணன், ஆலாமரத்தூர்:- எங்கள் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு கூட்டத்தில் விவசாயிகள் பேசினார்கள்.


Next Story