சித்தையன்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்ட கேள்விக்கு தலைவியின் கணவர் பதில் கூறியதால் சலசலப்பு
சித்தையன்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்ட கேள்விக்கு தலைவியின் கணவர் பதில் கூறியதாக சலசலப்பு ஏற்பட்டது.
செம்பட்டியை அடுத்த சித்தையன்கோட்டை பேரூராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவி போதும்பொண்ணு முரளி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜாகீர்உசேன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். கூட்டத்தில், சித்தையன்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் சக்திவேல், பேரூராட்சி தலைவியின் கணவர் முரளி மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தங்களது வார்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் தெரு விளக்குகள் கேட்டு கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த பேரூராட்சி தலைவி, தெரு விளக்குகள் அமைப்பதற்கு நிதி இல்லை என்று கூறினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த துணைத்தலைவர் ஜாகீர் உசேன், பேரூராட்சியில் போதிய நிதி இருப்பதாகவும், அதனை வைத்து அனைத்து வார்டுகளுக்கும் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். இதனால் பேரூராட்சி தலைவி பதில் கூற முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு பதிலாக, அவரது கணவர் முரளி, கவுன்சிலர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார். இது கவுன்சிலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும் கூட்டம் நிறைவடையும் தருவாயில், கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த செயல்அலுவலர் திடீரென்று எழுந்து சென்றார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்ட முடிவில், கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி தலைவி கூறினார்.