அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்


அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
x

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

தர்மபுரி

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்தல் குறித்த அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இ்தில் சப்-கலெக்டர் சித்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, அரூர் உதவி கலெக்டர் விஸ்வநாதன் மற்றும் தாசில்தார்கள், தேர்தல் தாசில்தார்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்கும் பொருட்டு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து இப்பணியை சிறப்பாக மேற்கொள்ளும் பொருட்டு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

6 பி படிவம்

மாவட்டத்திற்குட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளம், Voter Helpline APP (VHA) என்ற செயலி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6 பி-யில் பூர்த்தி செய்தும் வழங்கலாம்.

மேலும் தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 1,479 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக 6 பி படிவம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம், "இ" சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவைகளை அணுகியும் ஆதார் விவரங்களை சமர்பித்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.


Next Story