தேனியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம்


தேனியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம்
x

தேனியில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் ஆதார் எண் இணைப்பு பணியை வரவேற்பதாக அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆதார் எண் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆதாருக்கு பதில் இதர அடையாள ஆவணங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம் என்றும் கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்தில் தேர்தல் பிரிவு தாசில்தார் ஜலால் பேசும்போது, "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பேரில் இந்த ஆதார் எண் இணைப்பு பணி நடக்கிறது. மக்கள் விரும்பினால் மட்டும் இணைத்துக்கொள்ளலாம். ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மக்கள் தாங்களே இணைய வழியில் ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது வீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்கலாம். மேலும் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதால் அரசியல் கட்சியினர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குச்சாவடி முகவர் வீதம் நியமித்து அந்த பட்டியலை ஒரு வார காலத்தில் தேர்தல் பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்" என்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா மற்றும் தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அ.தி.மு.க. தரப்பில் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி என இரு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story