மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
கண்காணிப்பு குழு கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார். கூட்டத்தில் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் பேசியதாவது:-
தற்போது அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு மட்டும் தனியாக ஒரு மாவட்ட கல்வி அலுவலரை மாவட்ட அளவில் நியமிக்க முடிவு செய்துள்ளது. இதனால் மாவட்ட அளவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிரமம் அடைவார்கள். எனவே நான்கு ஒன்றியங்களுக்கு ஒரு மாவட்ட கல்வி அலுவலர் என்ற அடிப்படையிலேயே அமைக்க வேண்டும். இதுபோல மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு செல்லும் பொழுது காப்பீட்டு தொகை வரும் வரை அறுவை சிகிச்சை செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே காப்பீட்டு தொகைக்கு காத்திருக்காமல் முன்கூட்டியே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சிவகங்கை-இளையான்குடி ெரயில்வே சந்திப்பிலும், காளையார்கோவில்-கல்லல் ெரயில்வே சந்திப்பிலும் மேம்பாலம் கட்ட வேண்டும். அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விபத்துகள்
தொடர்ந்து மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. திட்டம் வாரியாக ஆய்வு செய்தார். மேலும் அந்த திட்டம் மக்களுக்கு செல்கிறதா என்பதை அவர் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார். சாலைபாதுகாப்பு தொடர்பான கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:- இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விபத்துக்கள் அதிகம் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே விபத்துக்களை குறைக்க உரிய நடவடிக்க எடுக்க வேண்டும்.
விழிப்புணர்வு
ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளை அரசின் அனைத்து கூட்டங்களுக்கும் அழைக்க வேண்டும். அவர்களும் தவறாமல் கூட்டங்களுக்கு சென்று என்ன நடக்கிறது என்பதை தெரிந்த கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி, (காரைக்குடி), மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் செல்வி மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.