ஊராட்சி தலைவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
ஊராட்சி தலைவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தேனி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பகுதியில் நேற்று நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சின்னப்பாண்டி முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், குடிநீர் ஆபரேட்டர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அதனை நேரடியாக வழங்க வேண்டும். ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர், குடிநீர் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, ஊராட்சி மன்ற தலைவர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
அனைத்து ஊராட்சிகளுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் மாநில நிதிக்குழு நிதியை விரைவாக வழங்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.