தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
தர்மபுரியில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தர்மபுரி நகர தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் அழகு தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் உமாசங்கர், ரேணுகா தேவி, ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் வேலுமணி, நடராஜ், சோலைமணி, சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் 50 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதற்காக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் அந்தந்த பகுதி பொதுமக்களை அணுகி வாக்காளர் பட்டியலில் தகுதியுடைய வாக்காளர்களை சேர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும். இதேபோன்று வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் மற்றும் போலியான வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் அந்தந்த பகுதிகளில் தமிழக அரசின் சாதனைகளை எடுத்து கூறி ஆதரவு திரட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர பொருளாளர் சம்பந்தம், நகர துணை செயலாளர்கள் முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவள்ளி ரவி, மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், சுருளிராஜன் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.