குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்


குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

கலந்தாய்வு கூட்டம்

சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் மாவட்ட அளவில் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஜான்சிராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பான விவரங்களை சேகரித்து தகவல்களை ஒருங்கிணைத்து, தர்மபுரி மாவட்டத்தின் நகர, வட்டார, கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

பதாகைகள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் மேற்கொள்ள வேண்டும். குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, பள்ளி இடைநின்ற குழந்தைகளை படிப்பை தொடர செய்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல் தொடர்பாக நகர, வட்டார, கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான புகார்களை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்பதை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பொது இடங்களில் எழுதி வைக்க வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் எழுதி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.

கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழுமம், இளைஞர் நீதிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story