சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கூட்டம்
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தலைமையில் நடந்தது. யூனியன் ஆணையாளர்கள் ஜெகநாதசுந்தரம், ரத்தினவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் கேசவன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- துணை தலைவர் கேசவன்:- ஊராட்சி ஒன்றிய ஒப்பந்த பணிகள் எடுத்தவர்கள் பணி எடுக்கும்போது செலுத்திய டெபாசிட் தொகையை 6 மாதத்திற்கு மேல் ஆகியும் திருப்பி தரவில்லை. உடனடியாக அதை திருப்பி தர வேண்டும். கவுன்சிலர் நதியா:- நாங்கள் பொறுப்புக்கு வந்து 3 வருடம் ஆகியும் இதுவரை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மதகுப்பட்டி ஊராட்சியில் உள்ள கால்வாய் புதர்மண்டி கிடக்கிறது. ஆகையால் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தில் அதை சீரமைக்க வேண்டும்.
பத்மாவதி:- ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்வதே இல்லை. நாங்கள் மக்கள் பிரச்சினைகளை எப்படி கூறுவது?. அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கட்டணிப்பட்டி கந்தன் மலையில் கிரிவலம் செல்ல வசதியாக சாலை, தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் யூனியன் மேலாளர் சந்தான கோபாலன் நன்றி கூறினார்.