பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு தரமாக இருக்க வேண்டும்-அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவு
தர்மபுரி:
பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு தரமானதாக இருக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டம்
தர்மபுரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வேர் பாதுகாப்புத்துறையின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து விளக்கி பேசினர்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான டோக்கன்கள் கடந்த 3-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் எந்த புகாருக்கும் இடமின்றி செயலாற்றிட அனைத்து கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் ரொக்க தொகை ரூ.1,000 தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியிலிருந்து தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
பொங்கல் பரிசு தொகை தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பெறப்பட்டவுடன் அதனை தொடர்புடைய ரேஷன் கடைகள் நடத்தும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு முழு தொகைக்கும் ரூ.500 புதிய தாள்களாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தரமான கரும்பு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள், மேற்கண்ட தொகையினை தேவையின் அடிப்படையில் தினசரி ரேஷன் கடை விற்பனையாளருக்கு வழங்கிட வேண்டும். இதனை மண்டல இணைப்பதிவாளர் கண்காணிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு கரும்பு கொள்முதல் செய்யும் போது அரசாணையில் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி ஒரு கரும்பு 6 அடிக்கு குறையாமல் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு கொள்முதல் செய்யும் கரும்பு தரமானதாக இருக்க வேண்டும். கரும்பு நோய் தாக்காமல் இருப்பதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க போதுமான அளவில் உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
எந்த புகாரும்...
வருகிற 9-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதால் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, எந்தவித புகாருக்கும் இடமின்றி ரேஷன் கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழுமையாக பொங்கல் பரிசு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.