குடியரசு தின விழாவையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்-அதகபாடியில் கலெக்டர் சாந்தி பங்கேற்பு


குடியரசு தின விழாவையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்-அதகபாடியில் கலெக்டர் சாந்தி பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

குடியரசு தின விழாவையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதகபாடியில் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார்.

கிராம சபை கூட்டம்

குடியரசு தின விழாவையொட்டி தமிழக அரசு உத்தரவுப்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்தந்த ஊராட்சிகளில் உள்ள பொது இடத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் இந்த கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் அந்த பகுதியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கலைஞரின் வீடு கட்டும் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பயனாளிகளை தேர்வு செய்வது குறித்தும், அந்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் கிராமத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தெருவிளக்கு, சாலை வசதி, சாக்கடை கால்வாய் வசதி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

கலெக்டர் பங்கேற்பு

தர்மபுரி ஒன்றியம் அதகபாடி கிராமத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பசுவராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், கிராமங்களின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை சென்றடைய அனைத்து துறை அதிகாரிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.

அடிப்படை தேவைகள்

ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்களுடன் இணைந்து அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, தாசில்தார் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story