மானியத்தில் வழங்கப்படும் சொட்டுநீர் பாசன குழாய்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


மானியத்தில் வழங்கப்படும் சொட்டுநீர் பாசன குழாய்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

மானியத்தில் வழங்கப்படும் சொட்டு நீர் பாசன குழாய்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

100 சதவீத மானியம்

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, வேளாண்மை இணை இயக்குனர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் பொருட்சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சிறுதானிய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்தவேண்டும்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

அரசு மானியம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சொட்டு நீர் பாசன குழாய்கள் நிர்ணயிக்கப்பட்ட காலம் வரை பயன்படுத்தப்படாமல் வீணாகும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளுக்கு வழங்கப்படும் சொட்டுநீர் பாசன குழாய்களின் தரம் குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும்.

தொப்பையாறு அணை கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும். இந்த கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தொப்பையாற்றில் ரூ.4 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

குழு அமைத்து ஆய்வு

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

அரசின் சார்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் சொட்டுநீர் பாசன குழாய்களின் தரம் குறித்து தோட்டக்கலைத்துறை மூலம் அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலம் வரை இவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா?, சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். தர்மபுரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி கிராமப்புற ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மூலம் விவசாய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நீர் நிலைகள், ஓடைகள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர்பேசினார்.

இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை துணை இயக்குனர் மாலினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story