தர்மபுரியில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள உதவும் வகையில் வங்கிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகியவற்றை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். எனவே முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் பங்கேற்பவர்களுக்கு கோரிக்கை ஏதும் இருந்தால் தங்களது மனுவினை 2 பிரதிகளில் மாவட்ட கலெக்டரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.