சாயல்குடி பேரூராட்சி கூட்டம்
சாயல்குடி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
சாயல்குடி,
சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:- வார்டு உறுப்பினர் ஆபிதாஅனிபா அண்ணா:- கடலாடி ஒன்றியத்தை பிரித்து சாயல்குடியை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், முன்னாள் துணை சேர்மன் காமராஜ்:- சாயல்குடி வி.வி.ஆர். நகர் பகுதியில் நொண்டி பெருமாள் ஊருணி பகுதியில் ஈமை சடங்கு செய்வதற்கு அந்த இடத்தில் சின்டெக்ஸ் அமைத்து தண்ணீர் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு உறுப்பினர் இந்திரா செல்லத்துரை:- 3-வது வார்டில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். வார்டு உறுப்பினர் சண்முகத்தாய் சுப்ரமணியன்:- அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது சட்டமன்ற நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்த பயணியர் நிழற்குடையை சாயல்குடி போலீஸ் நிலையம், வருவாய் ஆய்வாளர்அலுவலகம் அருகில் அமைக்க வேண்டும். வார்டு உறுப்பினர் குமரையா:- சாயல்குடி அண்ணா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.
சாயல்குடி பேரூராட்சியை முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் கே.என்.நேருவிற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், வார்டு உறுப்பினர்கள் மாணிக்கவள்ளி பால்பாண்டியன், அழகர்வேல் பாண்டியன், இந்திராணி, பானுமதி, கோவிந்தன், மாணிக்கவேல் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.