போடிப்பட்டி ஊராட்சி தலைவர் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டு


போடிப்பட்டி ஊராட்சி தலைவர் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டு
x

போடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பதவி நீக்கம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

போடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பதவி நீக்கம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணை

உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நடத்திய விசாரணையின் முடிவில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது உண்மை என அந்த குழு அறிக்கை அளித்தது.

அதன் அடிப்படையில் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஒத்திவைப்பு

இந்த நிலையில் ஊராட்சி மன்றத்தலைவர் அளவில் நிதி முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கருதி ஊராட்சி மன்றத் தலைவர் மீது 1994-ம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 (1) (ஆ)-ன் படி விளக்கம் கோரி குற்றச்சாட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் ஏற்கத்தகுந்ததாக இல்லாததால் சட்டப்பிரிவு 205 (11)-ன் படி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களைக் கூட்டி தலைவரை பதவியிலிருந்து நீக்குவது குறித்து கருத்து கேட்க உத்தரவிடப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று போடிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தாசில்தார் கண்ணாமணி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர். ஆனால் தலைவர் உடல்நிலை சரியில்லாததால் வர முடியவில்லையென்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்றைய கருத்துக் கேட்பு கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் வரும் 24-ந் தேதி மீண்டும் கூட்டம் நடத்தப்படும் என்றும் தாசில்தார் கண்ணாமணி அறிவித்தார்.

இதனால் ஊழல் குற்றச்சாட்டில் ஊராட்சி மன்றத்தலைவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்ற பரபரப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story