மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகள், கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். இவ்வாறு பெறப்பட்ட 194 மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் கைத்தறி துறை சார்பில் வீடு இல்லாத கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானிய தொகையாக ரூ.4 லட்சம் வழங்கும் திட்டத்தின்கீழ் பரமக்குடியை சேர்ந்த 16 கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.64 லட்சத்திற்கான ஆணையினை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வறுமையில் உள்ள சொந்த வீடு இல்லாத கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு அரசு மானியமாக ரூ.4 லட்சம் வழங்கி வருகிறது. தகுதியுடைய நெசவாளர்கள் விண்ணப்பித்து வீடு கட்டி பயன்பெற வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, துணை கலெக்டர் மாரிச்செல்வி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கேர்லின் ரீட்டா, கைத்தறி உதவி இயக்குனர் ரெகுநாத், உதவி பொறியாளர் தியாகராஜன், ஆய்வாளர் நாகேசுவரன், குடிசைமாற்று வாரிய கண்காணிப்பு அலுவலர் தினேஷ்ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.