சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் சந்திப்புஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து ஆலோசனை
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் சந்தித்து பேசினர். ஈரோடு இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
சேலம்,
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க.வுக்கு இந்த தொகுதியை த.மா.கா. விட்டுக்கொடுத்தது. எனவே ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
கடந்த சட்டசபை தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக இருந்தனர். தற்போது இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.கருப்பண்ணன், சி.வி.சண்முகம் ஆகிய 6 அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேட்பாளர் யார்?
மேலும், இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வில் பலம் மிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவது என்றும், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்தும், முன்னாள் அமைச்சர் ஒருவரை போட்டியிட செய்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது..
இடைத்தேர்தலில் ஒருவேளை ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தை சந்தித்து முறையிடுவது, அதற்காக அ.தி.மு.க. வக்கீல்கள் குழு 23-ந் தேதி புதுடெல்லி செல்ல உள்ளனர். இதுகுறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.