முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்திப்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்திப்பு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்திப்பு: பழங்குடியின தகுதி பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 15-9-2022 அன்று (நேற்று) விருதுநகர் விருந்தினர் மாளிகையில், நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்தித்து, நரிக்குறவர் இன மக்கள் பயனடைய அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, பழங்குடியின தகுதி பெற்றுத் தந்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் நல்ல முறையில் செய்து தந்துள்ளது என்றும், வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், தங்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய விவரங்கள் குறித்து அரசு உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 49,506 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 23,472 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தன்னை நரிக்குறவர் சமுதாயத்தினர் சந்தித்ததை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவிட்டுள்ளார். அதில் தலைவர் கருணாநிதியின் வழியில் நடக்கும் நமது அரசு, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, சிறுபான்மைச் சமூகங்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் என்றும் துணைநிற்கும் என்று அவர்களிடத்தில் உறுதியளித்தேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.


Next Story