வரவு செலவு கணக்கு கேட்டு உறுப்பினர்கள் தகராறு
கிராமசபை கூட்டத்தில் வரவு செலவு கணக்கு கேட்டு உறுப்பினர்கள் தகராறு செய்தனர்.
கந்திலி ஊராட்சி ஒன்றியம் குரும்பேரி ஊராட்சி சார்பில் ஆலமரத்து வட்டம் பகுதியில் சிறப்பு கிராம கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ராஜா, சரவணன், ஜெகதா, தவனகொடி, ஆகியோர் கடந்த முறை நடைபெற்ற கிராம சபை கூட்ட தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றவில்லை, தற்போது வரவு செலவு கணக்கு காட்டுங்கள் என கூறினர். அதற்கு தலைவர் காட்ட முடியாது, வேண்டுமென்றால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என கூறினார். இதனால் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் வரவு செலவு அடுத்த முறை காட்டுவதாக கூறினார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம சபையில் துண்டு பிரசுரம் மற்றும் பேனர் மூலம் செலவு காட்ட வேண்டும், எதற்காக கிராம சபையில் கையெழுத்து நோட்டில் இரண்டு பக்கங்களை விட்டு கையெழுத்து வாங்குகிறீர்கள் எனக்கேட்டனர். கிராம சபை கணக்கு காட்டாதது குறித்து நாங்கள் கலெக்டரிடம் முறையிடுவோம் என தெரிவித்தனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.