அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
கும்பகோணம் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனா்.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனா்.
ஒன்றியக்குழு கூட்டம்
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரிஅசோக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூர்யநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாகக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதால் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் 95 மாணவ- மாணவிகளின் நலனுக்காக 2 வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம் ஒன்றிய பொதுநிதி மற்றும் கல்வி நிதியில் இருந்து மேற்கொள்வது.சுந்தரபெருமாள்கோவில், சேஷம்பாடி, சோழபுரம் பேரூராட்சி, திருவலஞ்சுழி, கடிச்சம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பழுதடைந்த பள்ளிகட்டிடம் மற்றும் சாலைகளை சீரமைத்தல் என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெளிநடப்பு
கூட்டம் நடந்து கொண்டிருந்த போது 504-வது மன்ற பொருளில், 2022-23-ம் ஆண்டுக்கான 15-வது நிதிக்குழு பணிகள் ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட வார்டு ஒன்றிய கவுன்சிலர்களின் ஆலோசனை பெறாமல், தன்னிச்சையாக ஒப்புதல் வழங்கியதை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.இதைப்போல தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் டி.கணேசன், கும்பகோணம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழுத் தலைவியின் கணவரின் தலையீடு அதிகமாக உள்ளது. என கூறி தனது ஆதரவு உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.
28 தீா்மானங்கள்
இது குறித்து ஒன்றியக்குழு தலைவர் காயத்ரிஅசோக்குமார் கூறியதாவது:-
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் 28 தீர்மானங்கள், அரசு செலவினங்கள், வளர்ச்சி திட்டங்கள் 15- வது நிதிக்குழு மற்றும் பொது நிதியில் சுமார் ரூ.2 கோடிக்கு மேல் தீர்மானங்கள் வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30-ந் தேதி மற்றும் டிசம்பர் 1-ந் தேதிகளில்நடைபெற்ற 15-வது நிதிக்குழு பணிகளை குறைந்த ஒப்பந்த புள்ளிகளுக்கு வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்குவது தான் 504 தீர்மானம். ஆனால் இந்த பணிகளை அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு தனிதனியாக விகிதாசாரமாக வழங்கவில்லை என்பதற்காக தவறான குற்றச்சாட்டை ஆணையர் மேல் குறை கூறுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.