கும்பகோணத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க 'மீம்ஸ்' பதாகை
"தினத்தந்தி" செய்தி எதிரொலியாக குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க கும்பகோணத்தில் மீம்ஸ் பதாகை வைக்கப்பட்டது.
"தினத்தந்தி" செய்தி எதிரொலியாக குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க கும்பகோணத்தில் மீம்ஸ் பதாகை வைக்கப்பட்டது.
குப்பைகள்
கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோரங்கள், கடைவீதி பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடந்தன. குறிப்பாக கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சுற்றி குப்பைகள் மலைபோல குவிந்து கிடந்தது. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
இதுகுறித்து "தினத்தந்தி" நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. ்இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். மேலும் அங்கு குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதை தடுக்க அங்கு பொதுமக்களை கவரும் வகையில் 'மீம்ஸ்' பதாகை வைக்கப்பட்டுள்ளது.
தொடர்கதை
பொதுமக்கள், கடை வியாபாரிகள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டுவதும், அதை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றுவதும் தொடர்கதை போல நடந்து வந்தது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கும்பகோணம் மேயர் சரவணன், துணைமேயர் தமிழழகன், மாகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், மாநகர் நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
மீம்ஸ் பதாகை
அதன்படி புதிய பஸ்நிலையம் பின்புறம் ஜான் செல்வராஜ் நகரில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர். பின்னர் அங்கு விழிப்புணர்வு கோலமிட்டு மாநகராட்சி பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள ஒத்துழையுங்கள், எனது குப்பை எனது பொறுப்பு, கும்பகோணம் மாநகராட்சி இங்கு குப்பைகளை கொட்டாதீர் என வாசகங்களை எழுதினர்.
மேலும், குப்பை கொட்டப்பட்டிருந்த இடத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை வசனத்தை குறிப்பிட்டு 'மீம்ஸ்' பதாகை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டது. அதில் 'இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்' என நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த வித்தியாசமான முயற்சி பொதுமக்களிடம் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.