பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 2 வாரங்களில் தீர்வு காணாவிட்டால் அரசு அலுவலர்களுக்கு 'மெமோ'


பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது  2 வாரங்களில் தீர்வு காணாவிட்டால் அரசு அலுவலர்களுக்கு மெமோ
x

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 2 வாரங்களில் தீர்வு காணாவிட்டால் அரசு அலுவலர்களுக்கு ‘மெமோ’ வழங்கப்படும் கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்

திருப்பத்தூர்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 2 வாரங்களில் தீர்வு காணாவிட்டால் அரசு அலுவலர்களுக்கு 'மெமோ' வழங்கப்படும்

கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அதில் வேளாண்மை, காவல்துறை, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 567 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் மதிப்பில் சக்கர நாற்காலியும், தேசிய நிறுவனத்தின் பாதுகாவலர் சான்றிதழையும் வழங்கினார்.

அப்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

கிடப்பில் போட்டுள்ளனர்

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. துறை வாரியாக ஆய்வு மேற்கொண்ட போது 100-க்கணக்கான மனுக்கள் மீது அரசு அலுவலர்கள் தீர்வு காணாமல் மனுக்களை கிடப்பில் போட்டுள்ளனர். அதில், காவல் துறையில் அதிக மனுக்கள் தீர்வு காணாப்படாமல் உள்ளது.

திருப்பத்தூர் உட்கோட்டத்தில் 128 மனுக்களும், வாணியம்பாடி உட்கோட்டத்தில் 121 மனுக்களும், ஆம்பூர் உட்கோட்டத்தில் 81 மனுக்களும் என கிட்டத்தட்ட 350 மனுக்கள் மீது காவல் துறையினர் உரிய தீர்வு காணாமல் உள்ளனர்.

தீர்வு காணவில்லை

அதேபோல் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் துறை, சமூக பாதுகாப்பு திட்டம், வேலை வாய்ப்பு, கல்வித்துறை, கூட்டுறவு துறை, மின்வாரியம் என ஒவ்வொரு துறை அலுவலர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மனுக்கள் மீது 3 மாதம் முதல் 6 மாதங்கள் கடந்தும் தீர்வு காணாமல் கிடப்பில் வைத்துள்ளது வேதனையளிக்கிறது. அரசு அலுவலர்களின் இதுபோன்ற மெத்தனப்போக்கால் பொதுமக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை பாழாகிறது.

தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மனுக்கள் சென்றுள்ளன. அதில், திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் மூலம் 680 மனுக்கள் இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது.

நாட்றாம்பள்ளி தாலுகாவில் 282 மனுக்கள், ஆம்பூர் தாலுகாவில் 161 மனுக்கள், வாணியம்பாடி தாலுகாவில் 150 மனுக்கள், இதேபோல் 4 தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஆயிரக்கணக்கான மனுக்கள் மீது தீர்வு காணவில்லை என பட்டியல் நீள்கிறது.

அலுவலர்களுக்கு 'மெமோ'

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய தீர்வு காணாமல் இருப்பதால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், அரசு மீதும், அரசு அதிகாரிகள் மீது மக்கள் மத்தியில் அவப்பெயர் உண்டாகிறது.

ஆகவே, இனி வரும் காலங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசு அலுவலர்கள் 2 வாரங்களில் (15 நாட்கள்) உரிய தீர்வு காணவேண்டும். அல்லது மனுக்களில் உள்ள குறைகள் குறித்து மனுதாரருக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். இப்பணிகளை அரசு அலுவலர்கள் செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு 'மெமோ' வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கு.செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், மோகனகுமரன், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story