மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய பிரதிஷ்டை அசன விழா:திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய பிரதிஷ்டை அசன விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை அசன விழா நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பிரதிஷ்டை பண்டிகை
மெஞ்ஞாபுரம் பரி.பவுலின் ஆலய 176-வது பிரதிஷ்டை அசன விழா கடந்த 17-ந்தேதி ஐ.எம்.எஸ். கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலையில் ஆலயத்தின் முன்புறம் உள்ள கலையரங்கில் வட இந்தியப் பணித்தள விசுவாசிகளின் கலாச்சார நிகழ்ச்சி, நற்செய்தி கூட்டங்கள், ஜெயிக்கப் போவது யார் ? நிகழ்ச்சியும், மார்ட்டின் தேவ பிரசாத் சாஸ்திரியார், சாரா மார்ட்டினின் இசை வழி நற்செய்தியும், ஸ்தாபனங்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் எலியட் டக்ஸ் போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கனம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனையும், தொடர்ந்து அசன வைபவ மங்கள கால் நடுவிழா, மாலையில் எலியட் டக்ஸ் போர்டு பெண்கள் ஆரம்பப் பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழா, ஞானஸ்நான ஆராதனை, ஆயத்த ஆராதனையும் நடைபெற்றது.
அசன வைபவம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான அசன வைபவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு 176-வது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை மற்றும் பரிசுத்த திருவிருந்து ஆராதனையும், ஜாண்தாமஸ் ஐயர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், தொடர்ந்து உலையேற்றும் வைபவம், மாலை 4 மணிக்கு அசன வைபவம், இரவு 10 மணிக்கு வான வேடிக்கையும் நடைபெற்றது. அசன வைபவத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் திரளானவர்கள் கலந்து கொண்டு அசன விருந்து சாப்பிட்டனர்.
விழா ஏற்பாடுகளை பொது மகமை சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜெயபோஸ், செயலாளர் நவமணி ராபர்ட், பொருளாளர் சொர்ண ராஜ், இணைச் செயலாளர் செல்வின், சபை ஊழியர் பிளசிங் ஜிம்ரோஸ். ஒய்வு பெற்ற திருப்பணிவிடையாளர் எட்வின் ஜெபராஜ், திருப்பணிவிடையாளர்கள் நவராஜ், சாமுவேல் ரவி ராஜ், மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.