கத்தியால் குத்தி வியாபாரி கொலை
பேரளம் அருகே முன்விரோதம் காரணமாக பாத்திர வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:
பேரளம் அருகே முன்விரோதம் காரணமாக பாத்திர வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாத்திர வியாபாரி
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள ஏ.கிளியனூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(வயது 55). இருசக்கர வாகனத்தில் ஊர், ஊராக சென்று பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஷ்வா(22) என்பவருக்கும் இடையே இடபிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது..
நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள திருமெய்ஞானம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. தீமிதி திருவிழாவிற்கு சென்றுவிட்டு கனகராஜ் தனது குடும்பத்தினருடன் உறவினரான குருசாமி வீட்டுக்கு சென்றார். அப்போது குருசாமி வீட்டு வாசலில் இரு குடும்பத்தினரும் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
கத்தியால் குத்திக்கொலை
அப்போது அந்த வழியாக சென்ற விஷ்வா மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 10 பேர் சேர்ந்து கனகராஜ், அவரது மகன் ஆனந்தராஜ்(34) மற்றும் அவரது உறவினரான குருசாமி ஆகியோரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
குருசாமி மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவாரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா, பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கனகராஜின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
10 பேர் கைது
இதுகுறித்து குருசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான விஷ்வா மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொல்லுமாங்குடி கடைத்தெருவில் நின்று கொண்டிருந்த ஜெயக்குமார்(30), சுப்பிரமணியன்(44), அசோக்குமார்(27), சூர்யா(25), பிரகாஷ்(19), கலைவாணன்(60), சுரேஷ்(40), அரவிந்தன்(27), விஜய்(20) மற்றும் விஷ்வா ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.