வெளியூர்களில் இருந்து மஞ்சள் கொத்துகள் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்


வெளியூர்களில் இருந்து மஞ்சள் கொத்துகள் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்
x

பொங்கல் பண்டிகை விற்பனைக்காக வெளியூர்களில் இருந்துவியாபாரிகள் மஞ்சள் கொத்துகளை கொள்முதல் செய்தனர். மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

பொங்கல் பண்டிகை விற்பனைக்காக வெளியூர்களில் இருந்துவியாபாரிகள் மஞ்சள் கொத்துகளை கொள்முதல் செய்தனர். மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை வழிபாட்டில் மங்கல பொருட்களில் இலைகளுடன் கூடிய மஞ்சள் கொத்து முக்கிய இடம் வகிக்கிறது. புதுபானையில் இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்துகள் கட்டி அலங்காரம் செய்யப்படும். பின்பு புதிய அரிசியால் பொங்கல் வைத்து சூரியனை வழிபடும் வழக்கத்தை தமிழர்கள் இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.

இதன்காரணமாக மஞ்சள் கொத்து பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத பொருளாக விளங்கி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு1 நாள் மட்டுமே உள்ளதால் தஞ்சையில் மஞ்சள் கொத்துகள் முக்கிய கடைவீதிகளில் ஆங்காங்கே விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

தரத்தை பொறுத்து விலை

இதுகுறித்து வியாபாரி பிரபு கூறுகையில்:- நான் கடந்த 20 ஆண்டுகளாக மஞ்சள் கொத்து விற்பனை செய்து வருகிறேன். வழக்கமாக தஞ்சை பகுதி வடக்கு வாசல், மாத்தூர், பாச்சூர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் கொத்துகளை கொள்முதல் செய்வேன்.

மஞ்சள் கொத்துகளின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்து விற்பனைக்காக எடுத்து வருவோம். சின்ன மஞ்சள் கொத்து ஒன்று ரூ.6-க்கும், பெரிய மஞ்சள் கொத்து ஒன்று ரூ.10 முதல் 12-க்கும் கிடைக்கும்.

தட்டுப்பாடு

ஆனால், இந்த ஆண்டு தஞ்சை பகுதியில் மஞ்சள் கொத்து சாகுபடி போதிய மகசூல் தரவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக மஞ்சள் கொத்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தஞ்சை பகுதிகளில் மஞ்சள் கொத்துகள் அதிகளவில் விற்பனைக்கு கிடைக்கவில்லை.

இதனால் கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து மஞ்சள் கொத்துகளை இறக்குமதி செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம். தற்போது சின்ன மஞ்சள் கொத்து ஜோடி ரூ.20-க்கும், பெரிய மஞ்சள் கொத்து ஜோடி ரூ.50 முதல் 60-வரையிலும் விற்பனை செய்கிறோம். பொதுமக்களும் மஞ்சள் கொத்துகளை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

மகசூல் பாதிப்பு

மஞ்சள் தட்டுபாடு குறித்து பாச்சூரை சேர்ந்த விவசாயி தர்மராஜ் கூறுகையில்:- மஞ்சள் கொத்து சாகுபடிக்கு சுத்தமான நீர், நல்ல மண் வளம் மிகவும் அவசியம். பொங்கல் பண்டிகைக்கு 3-நாட்களுக்கு முன்பே மஞ்சள் கொத்து அறுவடை பணிகள் தொடங்கிவிடும்.

ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் கடும் பனிமூட்டம், குளிர் காரணமாக மஞ்சள் கொத்துகள் நோய் தாக்குதலில் சிக்கிகொண்டன.மேலும், போதிய வளர்ச்சியின்றி வயலிலேயே அழுக தொடங்கி விட்டன.

அதிகாரிகள் வழிகாட்ட வேண்டும்

இதன்காரணமாக தஞ்சை பகுதியில் மஞ்சள் கொத்து சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகள் ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர்.இனி வரும் காலங்களில் இவற்றை தடுக்க வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு மஞ்சள் கொத்து சாகுபடியை முறையாக செய்வது குறித்து அதிகாரிகள் வழிகாட்ட வேண்டும் என்பதே பாதிப்படைந்த விவசாயிகளின் கோரிக்கை என கூறினார்.


Next Story