டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை கைவிடக்கோரி வியாபாரிகள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்


டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை கைவிடக்கோரி வியாபாரிகள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
x

கும்பகோணத்தில் டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை கைவிடக்கோரி வியாபாரிகள் கோரிக்கை அட்டை (பேட்ச்) அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை கைவிடக்கோரி வியாபாரிகள் கோரிக்கை அட்டை (பேட்ச்) அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெஸ்ட் பர்சேஸ்

அனைத்து சில்லறை விற்பனை கடைக்காரர்களும் பொருட்களை மொத்த கொள்முதல் செய்யும் இடங்களில் அதற்கான சரக்கு சேவை வரியை செலுத்தி விடுகின்றனர். வரிகட்டிய பொருட்களை தான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் வணிக வரித்துறையினர் கடைகளுக்கு சென்று டெஸ்ட் பர்சேஸ் என கூறி பொருட்களை வாங்கி அதற்கு உரிய ரசீது இல்லை எனக்கூறி அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல என்பதை வலியுறுத்தியும், டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிட வலியுறுத்தியும் பல்வேறு கட்ட போராட்டங்களை வியாபாரிகள் நடத்தி வருகின்றனர்.

கோரிக்கை அட்டை

அதன்படி நேற்று கும்பகோணத்தில் 4-ம் கட்டாக போராட்டம் நடந்தது. அப்போது ஒவ்வொரு கடைகளிலும் கோரிக்கை தொடர்பான விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்து, கடை உரிமையாளர்கள் கோரிக்கை அட்டையை (பேட்ச்) அணிந்து இருந்தனர்.

இந்த நூதன போராட்டத்துக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சோழாமகேந்திரன் தலைமை தாங்கினார். நகை வியாபாரிகள் நலச் சங்கத்தலைவர் சேகர், பித்தளைப் பாத்திர வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆத்மலிங்கம், தி ஆட்டோபார்ட்ஸ் டீலர்ஸ் சங்கத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துண்டு பிரசுரம்

தைத்தறி மற்றும் பட்டு ஜவுளி வியாபாரிகள் சங்கத்தலைவர் கோகுல், சோழ மண்டல கணினி விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் ரமேஷ்கண்ணன் ஆகியோர் ஒவ்வொரு வியாபாரிகளும் தங்களது கடைகளில் கோரிக்கை அடங்கிய துண்டு பிரசுரம் ஒட்டுவதற்கும், வியாபாரிகள் அணிந்துகொள்வதற்கும் கோரிக்கை அட்டையை வழங்கினர்.

இதில் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர் கியாசுதீன், கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு பொருளாளர் மாணிக்கவாசகம், துணைத்தலைவர் ரமேஷ்ராஜா, துணைச் செயலாளர்கள் வேதம்முரளி, அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார். முடிவில் நகை வியாபாரிகள் நலச் சங்க பொருளாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.


Next Story