வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
தஞ்சாவூர்:
வியாபாரி கொலை செய்யப்பட்டதை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மளிகைக்கடை வியாபாரி கொலை
தஞ்சையை அடுத்த கரந்தை ராஜாராமன் மடத்து தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 75). இவர் கரந்தையில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 9-ந் தேதி இரவு இவர் கடையில் இருந்தபோது 2 வாலிபர்கள் அரிவாளுடன் கடைக்குள் புகுந்து பணம் கேட்டு மிரட்டினர்.
செந்தில்வேல் பணம் கொடுக்க மறுத்ததால் அவரை அரிவாளால் வெட்டி, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2,500-யை எடுத்து சென்றனர். அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த செந்தில்வேல் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து கரந்தை பகுதியில் நேற்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆர்ப்பாட்டம்
மேலும் வணிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட செந்தில்வேல் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கஞ்சா விற்பனை தடுப்பதுடன் கஞ்சா வியாபாரிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் வணிகர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது, மூத்த வணிகர் செந்தில்வேல் கஞ்சா கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். இதுபோல் சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட செந்தில்வேல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தையொட்டி கரந்தை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.