நெல்லில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிகள்
நெல்லில் காணப்படும் மஞ்சள் கரிபூட்டை நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த வழிமுறைகளை வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மதுரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கரிப்பூட்டை நோய்
சிவகங்கை மாவட்டத்தில் சென்ற ஆண்டு நெல்லில் பல்வேறு பகுதிகளில் லட்சுமி நோய் என்று அழைக்கப்படும் மஞ்சள் கரிப்பூட்டைநோய் தாக்குதல் காணப்பட்டது. இதனால் ஒவ்வொரு தானியமும் மஞ்சள் நிற பழம் போல் மாறிவிடும். மென்பட்டு போன்ற தோற்றத்துடன் கருப்பு நிற நெல் பழ உருண்டைகள் காணப்படும்.
முதலில் இந்த உருண்டைகள் சிறியதாகவும், பின்பு வளர்ச்சி அடைந்து 1 செ.மீ வரை பெரியதாகிறது. இவை நெல் உமிகளுக்கு இடையே காணப்படும். பூக்கும் போது பூ பகுதிகளை சுற்றியும் இருக்கும். சூல தானியங்கள் மட்டுமே தாக்கப்பட்டு மற்றவை நல்ல மணிகளாக இருக்கும். பூஞ்சாண வளர்ச்சி தீவிரமாகும் போது உருண்டை வெடித்து காற்றில் பரவுவதால் மற்ற பயிர்களுக்கும் எளிதில் பரவுகிறது.
கட்டுப்படுத்தலாம்
பொதுவாக கதிர் பருவத்தில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். வளர்ச்சி பருவத்தில் தெரியாது. அதிகமழை, அதிக தழைச்சத்து இடுவதால் நெல்லில் பூஞ்சாண வித்துக்கள் ஏற்கனவே இருப்பதால் இந்தநோய் உண்டாகிறது. இந்தநோய் வந்த பின்னர் கட்டுப்படுத்துவது கடினம். இது நடப்பட்ட பயிரைவிட முன் நடவுபயிர்களை அதிகம் பாதிக்கிறது. தழைசத்து உரத்தை பிரித்து அளிக்க வேண்டும்.
குளிர்காலத்தில் முறையாக வயலை கண்காணிக்க வேண்டும். விதை மூலம் பரவும் என்பதால் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 2 கிராம் கார்பன்டசிம் விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் ஆரம்பத்திலேயே இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.