மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள்


மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் க.ராஜராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் க.ராஜராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் சீர்காழி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இளம் சம்பா மற்றும் தளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீரை வடிய வைத்து வேர் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க செய்ய வேண்டும். நீரில் மூழ்கிய பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்படலாம் அதனை சரி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன், 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து இரவு முழுவதும் வைத்து மறுநாள் தண்ணீர் வடிந்தவுடன் வயலில் தெளிக்க வேண்டும்.

இலைவழி உரம்

போதிய அளவு வெளிச்சம் தென்பட்ட பிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். இலை சுருட்டு புழு, தண்டு துளைப்பான் சேதாரம் அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 400 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பாக்டீரியா இலை கருகல் நோயின் அறிகுறி காணப்பட்டால் ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்கிளின் 120 கிராம் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

நோயின் அறிகுறி

நெற்பயிரில் குலை நோயின் சிறு புள்ளிகள் காணப்பட்டால் ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டாசிம் பூஞ்சானகொல்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து அதாவது யூரியாவை உரமிடுவதை தவிர்க்கலாம்.மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மைய வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story