மெட்ரோ பணிகள்: சென்னையின் பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம்..!
மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால், சென்னையின் பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிரீன்வேஸ் சாலை- டி.ஜி.எஸ் தினகரன் சாலை சந்திப்பில் சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் நடைபெற உள்ளதால் ஒருவார காலத்திற்கு தற்காலிக போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் செயல்பட்டுவந்தது. மேலும் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றம் இன்று முதல் 11-ந்தேதி வரை 4 நாட்கள் கூடுதலாக கீழ்க்கண்டவாறு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கீரீன்வேஸ் சாலை சந்திப்பில் இருந்து செல்பவர்கள் இடதுபுறமாக திருப்பிவிடப்பட்டு காமராஜர் சாலை வழியாக திரும்பி சீனிவாச அவென்யூ மூலமாக, ஆர்.கே.மட சாலை அடைந்து அவர்களது செல்ல வேண்டிய இலக்கை அடையலாம். (நெரிசல் மிகுந்த நேரத்தில் அடையாரில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் மலர் மருத்துவமனை அருகில் உள்ள 4வது பிரதான சாலை வழியாக, கோட்டூர்புரம் சென்று காந்தி மண்டபம் சாலை வழியாக அவர்களது செல்லும் இலக்கை அடையலாம்) இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்தினால் காமராஜர் சாலை சீனிவாச அவென்யூ சந்திப்பில் இருந்து காமராஜர் சாலை கீரீன்வேஸ் ரோடு சந்திப்பு வரை, ஒரு வழி பாதையாகவும், சீனிவாச அவென்யூ மற்றும் ஸ்கூல் ரோடு முழுவதும் ஒரு வழிபாதையாகவும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
காமராஜர் சாலை, சீனிவாச அவென்யூ மற்றும் ஸ்கூல் ரோடு முழுவதும் போக்குவரத்து இடையூறாக எந்த வாகனமும் நிறுத்த அனுமதி கிடையாது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, ஈ.வி.ஆர். சாலை, ஷெனாய் நகரில் அரசியல் கூட்டம் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. ஈ.வி.ஆர்.சாலையில் அண்ணா வளைவில் இருந்து ஈகா சந்திப்பு நோக்கி சிறு மற்றும் கனரக வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
இந்த வாகனங்கள் 3-வது அவென்யூ, அண்ணா நகர் ரவுண்டானா, கே4 அண்ணாநகர் பி.எஸ்., 3-வது அவென்யூ எக்ஸ் புதிய ஆவடி சாலை சந்திப்பு, நியூ ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை மற்றும் பிளவர்ஸ் சாலை வழியாக ஈ.வே.ரா சாலையை அடையலாம். ஈ.வே.ரா. சாலையில் இருந்து வெளியேறும் அனைத்து வணிக வாகனங்களும் ஈகா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி குருசாமி பாலம், ஸ்டெர்லிங் சந்திப்பு, ஸ்டெர்லிங் சாலை வழியாக செல்லலாம்.
தேவைப்படின் கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை எக்ஸ் நியூ ஆவடி சாலை சந்திப்பில் இருந்து ஈ.வே.ரா. சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது. பொது வாகனங்கள் (உள்வரும் திசை) புல்லா அவென்யூ சந்திப்பில் திரு.வி.க. பார்க், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை மற்றும் டெய்லர்ஸ் சாலை வழியாக செல்லலாம். பொது வாகனங்கள் (வெளியே செல்லும்) ஈ.வே.ரா சாலை - டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, நியூ ஆவடி சாலை மற்றும் ஹால்ஸ் சாலை புல்வா அவென்யூ வழியாக ஈ.வே.ரா. சாலையினை அடையலாம். நியூ ஆவடி சாலை எக்ஸ் ஹால்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஈ.வே.ரா சாலை நோக்கி பொது வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
நியூ ஆவடி சாலையில் இருந்து டெய்லர்ஸ் சாலையை நோக்கி ஹால்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்ல இயலாது. சேத்துப்பட்டு சந்திப்பில் இருந்து ஹாரிங்டன் சாலையில் வரும் வாகனங்கள் நமச்சிவாயபுரம் பாலம் சந்திப்பிலிருந்து ஈ.வே.ரா சாலையை நோக்கி அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் நமச்சிவாயபுரம் பாலம், சூளைமேடு, என்.எம்.ரோடு வழியாகச் செல்லலாம்.
என்.எம். சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நமச்சிவாயபுரம் சந்திப்பில் இருந்து ஈ.வே.ரா சாலை நோக்கி அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் நமச்சிவாயபுரம் சந்திப்பில் இருந்து ஹாரிங்டன் சுரங்கப்பாதை மற்றும் சேத்துப்பட்டு சந்திப்பு நோக்கிச் செல்லலாம்.
வி-5 திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்டேட் ரோடு நிழற்சாலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) "பன் ஸ்ட்ரீட்ஸ்" என்ற நிகழ்வு நடைபெற இருப்பதால் ஆபிசர் காலனி சந்திப்பு முதல் டி.ஏ.வி. நிழற்சாலை சந்திப்பு வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மேற்கண்ட நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
திருமங்கலத்தில் இருந்து எஸ்டேட்ரோடு கோல்டன் பிளாட் வழியாக அம்பத்தூர், ஆவடி நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் பாடி மேம்பாலம் டி.வி.எஸ். லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக செல்ல வேண்டும். திருமங்கலத்தில் இருந்து ஜெ.ஜெ.நகர் முகப்பேர் மேற்கு நோக்கி செல்லும் வாகனங்கள் வளையாபதி சாலை வழியாக வலது புறம் திரும்பி பாரி சாலை வழியாக வலது புறம் திரும்பி திருவள்ளூர் சாலை வழியாக செல்லலாம்.
ஆவடி, அம்பத்தூர் ஓ.டி.யில் இருந்து கோல்டன் காலனி வழியாக திருமங்கலம் அண்ணாநகர் செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் டி.வி.எஸ். லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக 100 அடி சாலை வழியாக செல்ல வேண்டும். சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையில் உள்ள இ4 அபிராமபுரம் போக்குவரத்து காவல் சரகத்திற்கு உட்பட்ட துர்க்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார் 5 மணியளவில் "அலார்ட்" நிறுவனம் சார்பாக முதலுதவி கற்றுக் கொள்வதற்கான விழிப்புணர்வையும் சகிப்பு தன்மையும் ஏற்படுத்துவதற்காக ஓட்டம், நடை மற்றும் மிதிவண்டி, இரு சக்கர வாகனம் ஓட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து தொடங்கி டி.ஜி.எஸ் தினகரன் சாலை முதல் முட்டுகாடு வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 5 மணி முதல் 8 மணி வரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. லைட் ஹவுசில் இருந்து சாந்தோம் ஹை ரோடு மற்றும் மந்தவெளி சந்திப்பில் இருந்து தெற்கு கால்வாய் கரை சாலை, அடையார் நோக்கி வரும் வாகனங்கள் தெற்கு கெனால் பேங்க் ரோடு சந்திப்பில் இருந்து திரு.வி.க பாலத்திற்கு அனுமதிக்கப்படாது, அதற்கு பதிலாக வலது பக்கமாக திரும்பி மந்தவெளி சென்றடையலாம்.
கிரீன்வேஸ் சாலையில் இருந்து மற்றும் ஆர்.கே.மட் ரோடு வழியாக பிராட் கேசில் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அடையார் இசைக் கல்லூரி சந்திப்பில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது, டி.ஜி.எஸ். தினகரன் சாலை முதல் டி.வி.கே பாலம் வரை சென்று வலது பக்க உள் பாதையில் சென்று மந்தவெளியை அடையலாம்.
திரு.வி.க பாலத்தில் இருந்து 3-வது அவென்யூ மற்றும் 2-வது அவென்யூ நோக்கி வரும் அனைத்து உள்வரும் வாகனங்கள் எம்.எல். பூங்காவில் திருப்பி விடப்படும் பின்னர் இடது புறம் திரும்பி எல்பி ரோடு சாஸ்திரி நகர் 1-வது அவென்யூவில் சென்று தங்கள் இலக்கை அடையலாம். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் (எம்.டி.சி. பேருந்துகள் உட்பட) சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ எக்ஸ் பெசன்ட் நகர் 2-வது அவென்யூ சந்திப்பு - வலதுபுறம் - சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ- பெசன்ட் நகர் 2-வது அவென்யூ வலதுபுறம் திரும்பி பெசன்ட் நகர் 1-வது அவென்யூ மற்றும் பெசன்ட் நகர் 2-வது அவென்யூ 7-வது அவென்யூ சந்திப்பு - வலது- எம்.ஜி. சாலை - எல்.பி. சாலை சந்திப்பில் இருந்து அவர்களின் இலக்கை அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.