மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது,
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 24-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். அன்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் இரவு 8 மணி முதல் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை விட அதிகமாக இருந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்தது.
நேற்று முன்தினம் காலை அணையின் நீர்மட்டம் 118.11 அடியாக இருந்தது. இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது. இதன்படி நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.82 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 166 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.