மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x

ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

சேலம்

மேட்டூர்:-

ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

நீர்வரத்து குறைந்தது

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பின. இதனால் 2 அணைகளில் இருந்தும் அதிகளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைய தொடங்கியதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 35 ஆயிரத்து 393 கனஅடியாக குறைக்கப்பட்டது.

மேலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், ராசிமணல், கேரட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நின்றது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இது நேற்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

பாதுகாப்பு பணி

எனினும் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஒகேனக்கல்லில் அருவிகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அருவியில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் கரையோர பகுதிகளில் வருவாய் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கரையோர தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

மேட்டூர் அணை

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த 12-ந் தேதி காலையில் மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது.

அணை நிரம்பிய நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. 13-ந் தேதி வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது.

கடந்த 16-ந் தேதி அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் இரவு வரை அதே நிலையில் நீடித்தது.

65 ஆயிரம் கனஅடி

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலையில் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மதியம் வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

மாலையில் ஒரு லட்சம் கனஅடிக்கும் கீழ் குறைந்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஒரேநாளில் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர், நீர்மின்நிலையங்கள் மற்றும் 16 கண் மதகுகள் வழியாகவும், வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் கால்வாயிலும் திறந்து விடப்படுகிறது.


Next Story