மேட்டூர் அணை குறித்த நாளில் திறக்க வாய்ப்பு- அமைச்சர் துரைமுருகன்


மேட்டூர் அணை குறித்த நாளில் திறக்க வாய்ப்பு- அமைச்சர் துரைமுருகன்
x

காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெறும் என்றும், மேட்டூர் அணை குறித்த நாளில் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

தஞ்சாவூர்

காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெறும் என்றும், மேட்டூர் அணை குறித்த நாளில் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

தூர்வாரும் பணிகள்

தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பூதலூர் ஆனந்த காவிரி வாய்க்கால் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு பணிகள் தூர்வாரப்பட உள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

4,773 கிலோ மீட்டர்

காவிரி டெல்டா பகுதியில் உள்ள மாவட்டங்களில் தூர் வாரும் பணிகளுக்காக ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லா வேலைகளையும் ரூ.90 கோடியில் செய்ய இயலாது. எது அத்தியாவசியமோ? முக்கியத்துவம் வாய்ந்ததோ? அந்த பணிகள் செயல்படுத்தப்படும்.

ஆனந்த காவிரி வாய்க்காலை தூர்வார ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக 834 மண்வாரும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 4,773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட உள்ளது.

தாமதமின்றி...

தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், தலைமை பொறியாளர், கலெக்டர் வரை ஆய்வு செய்வார்கள். இதற்கு மேலாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவரும் ஆய்வு செய்வார்.

தூர்வாரும் பணிகளுக்காக இந்த முறை நிதிநிலை அறிக்கையிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் தாமதமின்றி விரைவாகவே பணிகள் நடைபெறும். முன்னதாகவே பணிகள் தொடங்கப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் சென்றடைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

குறித்த நாளில் தண்ணீர் திறப்பு

தூர்வாரும் பணிகள் நடைபெறும்போது, கால்வாய் தாழ்வாகவும் பாசன வயல்கள் மேடாகவும் மாறி விடுவதால் தண்ணீர் பாய்வதில் சிரமம் உள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள். இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு நல்ல நிலையில் இருப்பதால் பாசனத்துக்கான தண்ணீரை குறித்த நாளில் திறக்க வாய்ப்பு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

செயல்முறை விளக்கம்

நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர், தலைமை கொறடா கோவி. செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், பூண்டி கலைவாணன், நிவேதா முருகன், தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மேயர் சண்.ராமநாதன், தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் முருகேசன், பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூர்வாரும் பணிகளை உடனுக்குடன் கண்காணிப்பதற்கு உரிய செயலியின் செயல்முறை குறித்து கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா அமைச்சரிடம் விளக்கி கூறினார்.


Next Story