கடலூரில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி


கடலூரில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாட்டை தடுக்கும் வகையில் கடலூரில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

கடலூர்

மினி மாரத்தான் போட்டி

கடலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாட்டை தடுக்கும் வகையிலும், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் தனியார் பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை இலக்கை நோக்கி ஓடினர். முன்னதாக விழிப்புணர்வு துண்டுபிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது.

பெண் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு

இது பற்றி மாவட்ட கலெக்டர் கூறுகையில், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னேற்றும் வகையில் "பெண் குழந்தைகளை காப்போம் -பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்து வரும் பெண் குழந்தைகள் விகிதத்தை உயர்த்துதல், பாதுகாத்தல், பெண் குழந்தையின் கல்வி மற்றும் ஆண், பெண் சமத்துவத்தை உறுதி செய்தல் என்பது முக்கியமான நோக்கமாகும்.

நமது இந்திய நாட்டில் பெண் குழந்தை பாலின விகிதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்களில் "பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்டு 24.1.2015 அன்று பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் "தேசிய பெண் குழந்தைகள் தினம்" அன்று இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து உள்ளது என்றார்.

இதில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி, மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) கோமதி, நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி, மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி மண்டல தலைவர் சங்கீதா, கவுன்சிலர் சுபாஷினி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story