மீலாது விழா-சமூக நல்லிணக்க விழா நடந்தது
பெரம்பலூரில் மீலாது விழா-சமூக நல்லிணக்க விழா நடந்தது.
பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் ஆகியோர் சார்பில் மாபெரும் மீலாது விழா மற்றும் சமூக நல்லிணக்க விழா பெரம்பலூரில்-வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை எதிர்புறம் உள்ள மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இந்த விழாவிற்கு பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் முகம்மது முனீர் தலைமை தாங்கினார். அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஆலிம் பெருமக்கள் முன்னிலை வகித்தனர். விழாவில் பெரம்பலூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் பஷீர் அகம்மது இறை வழிபாடு நடத்தினார். ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட பொருளாளர் முகம்மது இப்ராகிம் சாதிக் விழாவினை தொடங்கி வைத்து பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள், பெரம்பலூர் மறை வட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் அடிகளார், சென்னை அடையாறு குராசானி பீர் பள்ளிவாசல் தலைமை இமாம் சதீதுத்தீன் பாஜில் பாகவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் திருவடிக்குடில் சுவாமி பேசுகையில், அன்பு தான் அனைத்துக்கும் முதன்மையானது. இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று சொல்லுகிறார்கள். ஆனால் அந்த சமூகத்தில் பெண் குழந்தை பிறந்தால் நற்செய்தி என்று அறிவியுங்கள் என்று இஸ்லாம் மார்க்கம் சொல்லியிருக்கிறது. அனைத்து சமூகத்தில் உள்ள நல்ல கருத்துகளை ஏற்று கொள்ள வேண்டும். அன்பை பகிர்ந்து கொள்ளும் சமூகம் தான் இஸ்லாம், என்றார். ராஜமாணிக்கம் பேசுகையில், அன்பு, இறக்கம், நம்பிக்கை அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் பலமாக காணப்படுவோம். பிரிவினையாக இருந்தால் பலவீனமாக காணப்படுவோம். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்றார். சதீதுத்தீன் பாஜில் பாகவி பேசுகையில், சமூக நல்லிணக்கத்தை போதித்தவர் நபிகள் நாயகம். அவர் இன்று வரை புகழப்படுகிறார். மேலும் அவர் இஸ்லாமியர்களில் வாழ்க்கையில் உள்ளார். அவரது புகழ் மேன்மேலும் வளரும். அனைத்து சமூகங்களும் ஒன்று சேர்ந்தால் நம்மளை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, என்றார். ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட துணைத் தலைவர் முகம்மது சல்மான் அன்வாரி துஆ பிரார்த்தனை செய்தார். விழாவில் பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், ஆலிம் பெருமக்கள் ஜமாஅத்துல் சபை நிர்வாகிகள், கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், வணிகர் சங்கம் உள்ளிட்ட பொதுநல சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பெரம்பலூர் ஐக்கிய ஜமாஅத் செயலாளர் முகம்மது பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட செயலாளர் அப்துல் சலாம் வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் வட்டார தலைவர் முகம்மது முஸ்தபா பாஜில் பாக்கவி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை காஜி அப்துல் சலாம் மற்றும் இஸ்லாமிய தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.