ஆவின் பால் விலை எதிரொலி: மதுரையில் டீ, காபி விலை 3 ரூபாய் உயர்வு -வர்த்தக சங்க செயலாளர் தகவல்
ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக மதுரையில் டீ, காபி விலை 3 ரூபாய் உயர்த்தப்படுகிறது என வர்த்தக சங்க செயலாளர் கூறினார்.
ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக மதுரையில் டீ, காபி விலை 3 ரூபாய் உயர்த்தப்படுகிறது என வர்த்தக சங்க செயலாளர் கூறினார்.
ஆவின் பால் விலை உயர்வு
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து அரசு நிறுவனமான ஆவின் அதை பாக்கெட் பாலாக மாற்றி விற்பனை செய்து வருகிறது. பெரும்பாலான கடைகளில் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆகவும் (ரூ.12 உயர்வு), 'டீ மேட்' (சிவப்பு) பாலை ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.76 ஆகவும் (ரூ.16 உயர்வு), 'கோல்ட்' (பிரவுன்) பாலை ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.56 ஆகவும் (ரூ.9 உயர்வு) உயர்த்தியிருக்கிறது. பால் அட்டை வைத்திருப்பவர்கள் ஆரஞ்சு ரக பாலை, ஒரு லிட்டர் ரூ.46-க்கு பெற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில் நீலம் மற்றும் பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்த விலை உயர்வு உடனே அமலுக்கு வந்ததால் இல்லத்தரசிகள், டீக்கடை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
டீ, காபி விலை உயர்வு
இது தொடர்பாக மதுரை மாவட்ட காபி, டீ வர்த்தக சங்கத்தின்செயலாளர் மீனாட்சி சுந்தரேஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆவின் பால் விலை, இதுவரை இல்லாத அளவிற்கு திடீரென உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் பால் நிறுவனம் அரசு சேவை நிறுவனம். இதனை தனியார் பால் நிறுவனங்களோடு ஒப்பீடு செய்து பால் விலையை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பால் விலை உயர்வு காரணமாக, மதுரை மாவட்டத்தில் காபி, டீ விலையை 3 ரூபாய் உயர்த்தி ரூ.12-ல் இருந்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்ய இருக்கிறோம். இந்த விலை உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆவின் விலையை குறைக்க வேண்டும்
ஆவின் பாலின் விலையை குறைக்க, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டீக்கடைகளில் பேப்பர் கப்பில் டீ வழங்குவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.