பால் விலையை தொடர்ந்து ஆவின் நெய் விலை திடீர் உயர்வு
ஆவின் பால் விலையை தொடர்ந்து தற்போது ஆவின் நெய் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை,
ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆவின் நெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பால் உற்பத்தி பொருட்களை ஆவின் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வினியோகித்து வருகிறது. இந்த நிலையில் நெய்க்கான புதிய விலையை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது. 16-ந் தேதி (நேற்று) முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
என்ன விலை?
அதன்படி, 15 லிட்டர் நெய் (டின்)- ரூ.10 ஆயிரத்து 725 (பழைய விலை ரூ.9,680); பிரீமியம் நெய் 1 லிட்டர்- ரூ.680 (ரூ.630); பிரீமியம் நெய் அரை லிட்டர்- ரூ.365 (ரூ.340).
நெய் அரை லிட்டர்- ரூ.305 (ரூ.285); நெய் 100 மி.லி. (பவுச்)- ரூ.70 (ரூ.65); நெய் 100 மி.லி. (ஜார்)- ரூ.75 (ரூ.70); நெய் 15 மி.லி. (பவுச்)- ரூ.14 (ரூ.12); நெய் 1 லிட்டர் (அட்டைப்பெட்டி)- ரூ.620 (ரூ.575); நெய் அரை லிட்டர் (அட்டைப்பெட்டி)- ரூ.310 (ரூ.280).
நெய் 1 லிட்டர் (ஜார்)- ரூ.630 (ரூ.580); நெய் அரை லிட்டர் (ஜார்)- ரூ.315 (ரூ.290); நெய் 200 மிலி. (ஜார்)- ரூ.145 (ரூ.130); நெய் 5 லிட்டர் (ஜார்)- ரூ.3,250 (ரூ.2,900).
இந்த விலை திருத்தத்தை அலுவலக மென்பொருளிலும், விலை பட்டியலிலும் சம்பந்தப்பட்ட அலுவலர் திருத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3 முறை உயர்வு
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, தமிழக அரசின் ஆவின் நிறுவனம் நடப்பாண்டில் கடந்த 9 மாதங்களில் 3-வது முறையாக ஆவின் நெய் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. கடந்த மார்ச் 4-ந் தேதி லிட்டருக்கு ரூ.20, கடந்த ஜூலை 21-ந் தேதி ரூ.45 என்ற அளவில் ஆவின் நெய்யின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது லிட்டருக்கு ரூ.50 என்ற அளவில் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.