மாரியம்மன் கோவில்களில் பால்குட ஊர்வலம்


மாரியம்மன் கோவில்களில் பால்குட ஊர்வலம்
x

சிறுநாகலூர் விளந்தை கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பால்குட ஊர்வலம்

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கெங்கையம்மன் கோவில் குளக்கரையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் இரவு கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

அதேபோல் திருக்கோவிலூர் அருகே உள்ள விளந்தை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் தென்பெண்ணையாற்றங்கரையில் இருந்து மேள, தாளம் இசைக்க பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்தனர். விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல், கூழ்வார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் விளந்தை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.


Next Story