பால் உற்பத்தியாளர்கள் கருப்புப்பட்டை அணிந்து போராட்டம்


பால் உற்பத்தியாளர்கள் கருப்புப்பட்டை அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் 244 ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் முன்பு பால் உற்பத்தியாளர்கள் கருப்புப்பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம்

கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

ஆவின் கொள்முதல் செய்யும் 1 லிட்டர் பசும்பாலுக்கு ரூ.35 என்பதை ரூ.42 ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.45 என்பதை ரூ.51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும், ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆணிவேராய் செயல்படும் கிராம சங்க பணியாளர்களை பணி வரன்முறைப்படுத்த தடையாக உள்ள விதிமுறைகளில் இருந்து விலக்கு அளித்து அவர்களை ஆவின் பணியாளர்களாக்க வேண்டும், கிராம சங்க பால் கொள்முதலில் ஐ.எஸ்.ஐ. பார்முலாவை அமல்படுத்த வேண்டும், கால்நடை தீவனம் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து கிராம ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் முன்பாக கருப்புப்பட்டை அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் செயல்படும் 244 ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களின் முன்பு அந்தந்த பகுதியை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கருப்பு பட்டை அணிந்தவாறும், கையில் கருப்புக்கொடியை ஏந்தியவாறும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 ஆயிரம் பேர் பங்கேற்பு

இப்போராட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் குண்டுரெட்டியார், பணியாளர் சங்க தலைவர் முருகன், நிர்வாகிகள் தாண்டவசமுத்திரம் மணி, செஞ்சி காதர்பாஷா, ஆயந்தூர் சிவனேசன், சிறுமதுரை பிரபாகரன், கிளியனூர் ஞானப்பிரகாசம், கொள்ளார் கிருஷ்ணமூர்த்தி உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 11 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி வரை கருப்புக்கொடி ஏந்தியவாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதன் பிறகும் எங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில் வருகிற 17-ந் தேதியன்று கறவை மாடுகளுடன் அந்தந்த கிராம கூட்டுறவு சங்கங்கள் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனர்.


Next Story