பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நல சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
போராட்டமானது, பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும். மிகக் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் கிராம கூட்டுறவு பால் சங்க பணியாளர்களை பணி வரன்முறை செய்திட வேண்டும்.
மானிய விலையில் தீவனம்
முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து கால்நடைகளுக்கும் இலவச காப்பீடு திட்டம் வழங்க வேண்டும். கால்நடை தீவனம் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி ஆவின் விற்பனை பிரிவு நெய், பால்கோவாவை மிகவும் நலிவடைந்த ஏழை, எளிய பால் உற்பத்தியாளர்கள் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
.போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலியமூர்த்தி, ராமு உள்பட 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.